Saturday, October 15, 2011

"புதிய தலைமுறை"யின் அபத்தம்!

'அணுவின்றி' என்று தலைப்பிட்டு இந்தவார 'புதிய தலைமுறை(!)' (20 Oct 2011) தலையங்கம் எழுதியுள்ளது.

அதிலிருந்து சில வரிகள்...

//தமிழகம் மின்பற்றாக்குறையிலிருந்து விடுபட வேண்டுமானால், அதற்கு ஒரே வழி மின்சார உற்பத்தியை அதிகரிப்பதுதான். அதுவும் கணிசமான அளவு பெருக்குவதுதான். தமிழகத்தில் பாயும் நதிகளின் நீர்வரத்து, அண்டை மாநிலங்கள் அனுமதிப்பதைப் பொருத்து இருக்கிறது. காற்று ஆண்டு முழுவதும் கிடைக்காது. சூரிய சக்தி மூலம் உற்பத்தி செய்வது அதிகச் செலவும் இடமும் பிடிக்கும். இவை எதைக் கொண்டும் கணிசமான அளவு மின்னுற்பத்தி செய்ய இயலாது. நிலக்கரி, பெட்ரோல் விளி மண்டலத்தில் கரிப்படலங்களை ஏற்படுத்தி பருவ நிலையில் மாற்றங்களை ஏற்படுத்தும். இந்தச் சூழலில் அணு மின்சாரம்தான் கணிசமான உற்பத்திக்கான வழி...//

//ஓடுகிற ஆறு, ஓசையிடும் கடல், அடுப்பில் எரியும் நெருப்பு, மின்சாரம், போக்குவரத்து, இயந்திரங்கள், ஏன் உண்ணும் உணவில் கூட விபத்துக்கான சாத்தியங்கள், பக்க விளைவுகள் உண்டு. அதற்காக அவையே வேண்டாம் எனச் சொல்லி விடுவோமா? தினம் சாலை விபத்துகளைப் படிக்கிறோம். பயணங்களை நிறுத்தி விட்டோமா? ரயில்கள் விபத்துக்குள்ளாகின்றன எனத் தெரிந்தும் ஏன் முன்பதிவில் இத்தனை முண்டியடித்தல்?

உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துகொண்டு உற்பத்தியில் இறங்குவதுதான் நடைமுறைக்கு ஏற்றது. கூடங்குளப் போராட்டக் குழுவினர் எந்த மாதிரியான பாதுகாப்பு வேண்டும் எனக் கேட்டுப் பெறட்டும். அதை விட்டு பேச்சுவார்த்தையே நடத்தமாட்டோம், வல்லுநர்கள் உட்பட யார் சொன்னாலும் அதற்கு செவி மடுக்கமாட்டோம், அணுமின் நிலையத்தை மூடியே ஆக வேண்டும் எனக் கோருவது நியாயமானதல்ல. //

*******

அணுஉலையின் ஆபத்துகளை அறிந்துகொண்டு விழிப்புணர்வு பெற்று, உலகமே அணுஉலை வேண்டாம் என்கிற நிலைக்குச் சென்று கொண்டிருக்கும்போது,'புதிய தலைமுறை' (இனியொரு விதி செய்வோம்!) என்று பெயரை வைத்துக்கொண்டு, வெற்றிலை மெல்லும் பழையகால பாட்டிபோல ஒரு பக்கத்திற்கு புலம்பி வைத்திருக்கிறது. 

உலகத்தில் பல இடங்களிலும் மாற்று எரிபொருள், இயற்கை எரிபொருள், சூரிய சக்தியைப் பயன்படுத்துதல், உயிரியல் எரிபொருட்கள் என்று ஆராய்ச்சிகள் முடுக்கிவிடப்பட்டிருக்கும் இக்காலத்தில், அதற்கான உந்துதலை இங்கிருக்கும் மிகப்பெரிய சக்தியான இளைய சமுதாயத்திடம் விதைக்காமல்,  இயற்கை/மாற்று ஆற்றல் ஆராய்ச்சிகளில் இந்திய இளைஞர்களின் பங்கு என்ன? என்று கேள்வி கேட்காமல், இளைஞர்களிடம் அபாயகரமான அணுவின் மீது மோகத்தை விதைக்கிறது 'புதிய தலைமுறை(!)'.

இனி வரும் காலத்தில் இந்திய மக்களுக்குத்தான் அதிய மின்னாற்றல் தேவைப்படும். அதற்காக இந்தியா முழுவதும் அணுஉலைகள் வைத்தாலும் 10% ஆற்றல்தான் அதிலிருந்து பெறமுடியும் என்பது இந்த அணுஉலை வல்லுநர்களே ஏற்றுக்கொள்ளும் உண்மை. கோடிக்கணக்கான மக்களையும் அவர்களின் தலைமுறைகளையும் பணயம் வைப்பது வெறும் 10% ஆற்றலுக்காகவா? என்று கேள்வி எழுப்பாமல் இப்படி எழுதியிருப்பது, 'புதிய தலைமுறையினரை', 'புழுத்த தலைமுறையினராக' மாற்றவா?